இயற்கை அழகான இடங்களை நாம் பார்க்கும்போது நம் மனம் அதில் லயித்து விடுகிறது .மனதில் எவ்விதமான கவலை உணர்வுகள் இருப்பினும் அவற்றை மறந்து இயற்கையோடு ஒன்றி விடுகிறோம்.உயர்ந்த எண்ணங்கள் அவ்விடங்களில் மனதில் உருவாகின்றன. முனிவர்கள்,சித்தர்கள் ,ஞானிகள் இது போன்ற இடங்களில் சிறிது காலம் தங்கியிருந்தாலும்,அவர்களின் எண்ண அலைகள் அங்கே இருக்கும்.அது போன்று அவர்கள் தரிசித்த கோயில்கள் , மற்றும் அருளாளர்களால் பாடல் பெற்ற தலங்களில் அவர்களின் எண்ண அலைகள் இருந்து கொண்டே இருக்கும்.நாம் தூய மனதுடன் அங்கு சென்று வணங்கி வரும்பொழுது நமது வாழ்வில் வரும் பிரச்னைகள் தீர்ந்து நாம் மீண்டும் அங்கே சென்று வர விரும்புவோம். வேத காலங்களில் ஆலயங்கள் இல்லை.இயற்கை சூழ் நிலையில் முனிவர்கள் வேள்வித் தீயால் வழிபாடு செய்தனர் .நதிக்கரையில் ஆசிரமங்கள் அமைத்து யாகங்கள் செய்து வந்தனர் .அங்கிருந்த மரங்களே பின்னர் தல விருட்சங்களாக அமைந்தன.பிற் காலத்தில் ஆகம விதிகளின்படி ஆலயங்களை அமைத்தனர் .இப்படி அமைந்துள்ள ஆலயங்கள் எல்லாம் மனித உடலாகிய ஆலயத்தின் வெளிச் சின்னங்கள் . மனித உடலே உயர்ந்த ஆலயம் என்பதை மூவாயிரம்ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த திருமூலர் ,"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்று தமது "திருமந்திரத்தில்"குறிப்பிட்டுள்ளார்.உலகெங்கும் வியாபித்திருக்கும் கடவுள் நமது மானிட சரீரத்திலும் சிறப்பாக வீற்றிருக்கிறார்.மனிதர்களால் இதை எளிதில் உணர முடியாதென்றே ஆலயங்களை ஆகம விதிகளின்படி அமைத்தனர். ஆலயங்களை மனித உடலமைப்பினை ஒத்திருக்குமாறு கட்டினர் நம் முன்னோர்கள் .பெரிய பிரகாரம் அமைத்து அதற்கு வாயிலாக ராஜ கோபுரம் அமைத்தனர் .நீண்ட தூரத்தில் இருந்தே ராஜ கோபுரத்தைக் காணலாம்.ராஜ கோபுரத்தை ஸ்தூல லிங்கம் என்று குறிப்பிடுவார்கள்.தூரமாக இருப்பவர்களுக்கும் இறைவனை நினைக்க இது உதவுகிறது.கோபுரத்தில் வித விதமான சிலைகள் அலங்கரிகின்றன.தேவர்கள் ,மனிதர்கள் ,விலங்கினங்கள் மற்றும் மனித வாழ்வை சித்தரிக்கும் சில காட்சிகள் ,சில ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.முனிவர்கள் தவம் செய்யும் உயர்ந்த காட்சிகள், கடவுளரின் அவதாரங்கள் இவையும் இடம் பெற்றிருக்கும்.உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும் காட்சிகள் நம்மை மேலோனாக்கும் சிந்தனையை உருவாக்கும்.ஆபாச காட்சிகளில் மனம் லயித்தால் நம்மை கீழ் நிலைக்குக் கொண்டு செல்லும்.உலகில் இரண்டும் உள்ளன.எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம்.
Comments
Post a Comment